மாநில செய்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெண்கல சிலை - அழகிரி கடிதம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வெண்கல சிலை அமைக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம் எழுதி உள்ளார். #Karunanidhi #Azhagiri
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.  ஸ்டாலினுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மு.க அழகிரி, கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தினார். 

இந்தநிலையில், கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே, நான் ஒரு தலைவன் அல்ல, தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30-வது நினைவுநாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று பேரணியில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து,  மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மு.க. அழகிரி கடிதம் எழுதி உள்ளார் அதில்,

தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், தி.மு.கழகத்தை, பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு கட்டிக்காத்தவரும், பல்வேறு சோதனைகளை தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பை பெற்றவருமான கலைஞர் அவர்கள் இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மை தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்றும் கண்ணீர் வடிக்கின்றனர். 

இத்தகு சிறப்புமிகு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் “ வெண்கலசிலையை அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.