மாநில செய்திகள்
மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை உடனே கலைக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை உடனே கலைக்க வேண்டும் என்று கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மகள் 12-ம் வகுப்பை முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு தினமும் சந்தோஷ்குமார் என்பவரது ஆட்டோவில் சென்று வந்தார். சந்தோஷ்குமார் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, என் மகளை காதலித்துள்ளார். இதை நம்பி அவருடன், கடந்த மே மாதம் என் மகள் சென்றுவிட்டார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார், என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோதுதான், அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மைனர் பெண்ணை கற்பழித்த வழக்கில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

என் மகளுக்கு தற்போது 17 வயதுதான் ஆகிறது. மைனர் பெண்ணான அவள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மைனர் பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து, கருவை கலைக்க சாத்தியமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி, மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘அந்த மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும். அதன்பின்னர், அதுகுறித்து அறிக்கையை வருகிற 11-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.