தமிழகத்தில் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி தொடங்கியது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2018-09-07 22:30 GMT
நெல்லை,

நெல்லையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்கி உள்ளது. காணொலி காட்சி மூலமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். வரும் கல்வி ஆண்டில் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று ‘நீட்’ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு நமது மாநிலத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1,000 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 1,000 மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 3 லட்சம் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.

ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம். அந்த புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாவூர்சத்திரம் அரசு பள்ளியில் நடந்த நீட் தேர்வு இலவச பயிற்சி மைய தொடக்க விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

தமிழகத்தில் மாணவர்களுக்கான ரேங்க் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதது. இந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஸ்கில் முறையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதனால் பிளஸ்-2 முடித்தாலே அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதி.

இந்த ஆண்டு வணிகவியல் படிக்கும் மாணவர்களில் 25 ஆயிரம் பேருக்கு ஜி.எஸ்.டி.க்கான பயிற்சி அளிக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரப்படும். ஆயிரம் கோடி ரூபாயில் அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்யப்படும்.

அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு டேப்லெட் வழங்கப்படும். அங்கன்வாடி முதலே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படும். வரும் காலங்களில் அனைத்து மாணவர்களுக்கும் செருப்புக்கு பதிலாக ஷூ வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறை மூலம் கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு 22 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

இந்த நிவாரண பொருட்களை நேற்று கேரள மாநிலத்துக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பச்சைக்கொடி அசைத்து அனுப்பிவைத்தார்.

மேலும் செய்திகள்