மாநில செய்திகள்
‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றும், டாக்டருக்கு படிக்க முடியாததால் மாணவி தற்கொலை

‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றும் டாக்டருக்கு படிக்க முடியாததால் மனம் உடைந்த என்ஜினீயரிங் மாணவி, தனது முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி தற்கொலை செய்துகொண்டார்.
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் மகாலட்சுமி நகர் புறநானூறு தெருவைச் சேர்ந்தவர் எட்வர்டு. இவர், தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவருடைய மனைவி சுஜாதா. இவர், தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார்.

இவர்களுடைய மகள் ஏஞ்சலின் சுருதி (வயது 19). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் மாணவி ஏஞ்சலின் சுருதி பிணமாக கிடந்தார். அவர், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, அதை செல்போன் சார்ஜர் வயரால் கழுத்து பகுதியில் இறுக்கி கட்டி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சேலையூர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மாணவி ஏஞ்சலின் சுருதி, நன்றாக படிக்க கூடியவர். சி.பி.எஸ்.இ. பள்ளியில்தான் பிளஸ்-2 படித்தார். டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தார். ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதினார். அதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததால் ஒரு ஆண்டாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார்.

இந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் 309 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு டாக்டருக்கு படிக்க அரசு ஒதுக்கீட்டில் ‘சீட்’ கிடைக்கவில்லை. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ ‘சீட்’ கிடைக்காததால் தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் ‘சீட்’ வாங்க முயற்சித்தனர்.

அதற்கு ரூ.12 லட்சம் கேட்டதால், அந்த பணத்தை அவரது பெற்றோரால் கட்டமுடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அவரை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து விட்டனர்.

சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஏஞ்சலின் சுருதி, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றும், டாக்டராக முடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்துகொண்டது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவி ஏஞ்சலின் சுருதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.