ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

தமிழக அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

Update: 2018-09-08 00:15 GMT
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வரவேற்று உள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் விடுதலை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும விடுதலை செய்வது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், பின்னர் அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் ஆகிய 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தங்களை விடுதலை செய்யக் கோரி கவர்னர், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நேற்று தனித்தனியே சிறைத்துறை மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த தகவலை நேற்று சிறையில் நளினியை சந்தித்து பேசிய அவரது வக்கீல் புகழேந்தி, பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

நளினி 6 மாதம் பரோல் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததாகவும், அந்த மனுவை நேற்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் புகழேந்தி கூறினார்.

மேலும் செய்திகள்