ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என நிரூபிக்க வேண்டும் பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது- ஜெயக்குமார் எஸ்.பி

ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது என போலீஸ் சூப்பிரெண்டு ஜெயக்குமார் கூறினார்.

Update: 2018-09-08 08:14 GMT
சென்னை

குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சிபிஐ சோதனை குறித்து ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னையில் துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார்.

சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

ஜார்ஜின் குற்றசாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர்.

உழைப்பது என் கடமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.

முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது.

பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.

என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்கவேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.மேல் மட்ட அரசியல் அது. மேல் லெவலில் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அது உங்களுக்குத் தெரியும். மேல் மட்டத்தில் அவர்களைக் குறிவைக்க முடியாததால் என்னைக் குறிவைக்கிறார்.என கூறினார்.

மேலும் செய்திகள்