சத்தியமூர்த்தி பவனில் அனைத்து கட்சி கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதையொட்டி சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2018-09-08 22:30 GMT
சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 10-ந் தேதி (நாளை) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பேராசிரியர் கான்ஸ்டன்டைன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் மு.வீரபாண்டியன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி பொருளாளர் ஏ.தர்மராஜ், கொங்குநாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவருமே இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒருமித்த ஆதரவை தெரிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்களும் தொலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளனர். 10-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் மட்டும் இந்த ஆர்ப்பாட்டம் 5 மணிக்கு நடைபெறும்” என்றார்.

அதனைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, சிறுபான்மைதுறை தலைவர் ஜே.அஸ்லாம்பாஷா, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

முன்னதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்