சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

சிவகாசி பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-09-08 23:00 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு தயாரிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ராஜு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பணி தொடங்கியது. இதில் 150-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நேற்று பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆலையில் உள்ள வெடிமருந்து கலவை அறையில் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 45), மாரியப்பன் (38), பாண்டி (43), பொன்னுசாமி (45) ஆகியோர் நேற்று காலை 10 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த அறை முழுவதுமாக தரைமட்டமானது. இதில் கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த பாண்டி, பொன்னுசாமி ஆகியோர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் 2 பேரும் இறந்தனர். இந்த விபத்தில் அதே ஆலையில் பணியாற்றி வந்த தேவி என்ற பெண் லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்