தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா? மூத்த வக்கீல்கள் கருத்து

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது அந்த தீர்மானத்தை நிராகரிக்க அவருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-08 23:15 GMT
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரது கருணை மனுவை தமிழக அரசே பரிசீலித்து, முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடி, 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுத்து தீர்மானம் இயற்ற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தீர்மானம் இயற்றி, கவர்னருக்கு அனுப்பினால், கவர்னர் அந்த தீர்மானத்தின் மீது எந்த விதமான முடிவு எடுப்பார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து நளினி தரப்பில் நீதிமன்றங்களில் ஆஜராகி வரும் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய 3 விதமான திட்டங்கள் உள்ளன. அதாவது, 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்தவர்களை, விடுதலை செய்யும் திட்டமாகும்.

இந்த 3 திட்டங்களிலும், இதுவரை ஆயிரக்கணக்கான ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், ஆயுள் கைதிகளாக தற்போது சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் இந்த திட்டத்தின் கீழ் விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு கூறியது.

இதை எதிர்த்து 2006-ம் ஆண்டே ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு, 7 பேரையும் விடுதலை செய்யப்போகிறோம் என்றும் அதுகுறித்து, மத்திய அரசின் கருத்தை கேட்டது. இதற்கு பதில் சொல்லாமல், சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக மத்திய அரசு வழக்கு தொடர்ந்து, தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை பெற்றது.

இதையடுத்து 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு, நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யப்போகிறோம் என்று தீர்மானம் இயற்றி மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பியது. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த கடிதத்துக்கு உரிய பதிலை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதன்படி மத்திய அரசு, கடந்த மாதம் தமிழக அரசு தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், பேரறிவாளன் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டியது இல்லை. இவரது கருணை மனுக்களை தமிழக அரசே, அதாவது கவர்னரே விசாரணை செய்து முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளது.

பேரறிவாளனை போல நளினி உள்ளிட்டோரின் கருணை மனுவும் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளது. இந்த மனுவை அரசு பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் நளினி ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான பின்னர், நளினியின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு, கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது என்று கூறியுள்ளதால், நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு நளினி ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இப்போது, நளினி, பேரறிவாளன் மற்றும் பிறருடைய கருணை மனு தமிழக அரசிடம் உள்ளன.

20 ஆண்டு சிறை கைதிகள் விடுதலை திட்டத்தின்படி நளினி உள்பட 7 பேரும் விடுதலைக்கு தகுதியானவர்கள். ஏன் என்றால், 1994-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு இயற்றிய சட்டத்தின்படி, சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஒரு கைதியும் இருக்கக்கூடாது. அவர்கள் எத்தகைய குற்றம் செய்திருந்தாலும், கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தின்படி தான் தமிழக அரசு, அமைச்சரவையை கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை இயற்ற உள்ளது. பின்னர், அந்த தீர்மானத்தை, தமிழக கவர்னருக்கு அரசு அனுப்பி வைக்கும். கவர்னரும் அந்த தீர்மானத்துக்கு எந்த விதமான எதிர்ப்பையும் சட்டப்படி தெரிவிக்க முடியாது.

அவர், அமைச்சரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற கடமைப்பட்டவர். சுப்ரீம் கோர்ட்டு 40 ஆண்டுகளுக்கு முன்பே, மாருராம் வழக்கில் இதை தெளிவாக சொல்லியுள்ளது. ஒரு முறை வேண்டுமானால், கவர்னர் தீர்மானத்தை திருப்பி அனுப்பலாம். மீண்டும் அந்த தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தால், 2-வது முறை கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டே ஆகவேண்டும்.

அரசு ஆணையை கண்டிப்பாக கவர்னர் நிறைவேற்றியே ஆகவேண்டும். எனவே, சிலர் கூறுவது போல, கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தீர்மானத்தை நிராகரிக்க தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை.

தமிழக அரசின் திட்டத்தையும், எண்ணத்தையும் நிறைவேற்ற கவர்னர் கடமைப்பட்டவர். தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்கிறோம் என்று சொல்லிவிட்டால், அந்த ஆணையில் கவர்னர் கையெழுத்திட்டே தீரவேண்டும் என்பது தான் அரசியலமைப்பு சட்டத்தின் கட்டளை. ஒருவேளை கவர்னருக்கு விருப்பம் இல்லை என்றால், அவர் காலதாமதம் மட்டுமே செய்ய முடியுமே தவிர, நிராகரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இவரது கருத்துக்கு எதிர்மறையான கருத்தை மூத்த வக்கீல் ஏ.சீராஜூதீன் கூறினார். அவர், ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த முடிவை கவர்னர் ஏற்கவில்லை. ஒவ்வொரு கைதியின் விவரங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்து, தனித்தனியாக அவர்களை தற்போது விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், கவர்னர் ‘ரப்பர் ஸ்டாம்பு’ போல் செயல்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை. கைதிகள் விடுதலை என்பது சமுதாய அமைதி தொடர்புடையது. அதனால், தமிழக அமைச்சரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியம் கவர்னருக்கு இல்லை’ என்றார்.

ஆனால், மூத்த வக்கீல் பி.வில்சன், ‘தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரிக்க கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை’ என்று கூறினார். ‘அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163(1) அமைச்சரவையின் தீர்மானத்தை கவர்னர் நிராகரிக்க முடியாது. அந்த பிரிவில் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது என்று கூறப்பட்டிருந்தாலும், அது அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிப்பு என்பதல்ல.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இயற்றும் தீர்மானத்தை, கவர்னர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்’ என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்