மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய திருநாவுக்கரசர் எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய திருநாவுக்கரசர் எதிர்ப்பு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் இந்திய நிர்வாக கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘உங்கள் தந்தை ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நீங்களும், உங்கள் சகோதரியும் மன்னித்து விட்டீர்களா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராகுல்காந்தி, ‘மன்னித்துவிட்டோம்’ என்று பதில் கூறினார். இதையடுத்து 7 பேர் விடுதலை செய்யப்படுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

இந்தநிலையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு சிபாரிசை(7 பேர் விடுதலை) கவர்னர் என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம். அவர் மத்திய அரசின் பிரதிநிதி. ஏற்கனவே மத்திய அரசு எடுத்த முடிவையே (நிராகரித்தது) அவர் எடுக்க வேண்டும்.

இவர்கள் (பேரறிவாளன் உள்பட 7 பேர்) பல ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் இவர்களை விடுதலை செய்கிறபோது தவறான முன் உதாரணத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான். கருணை, பல ஆண்டு என்கிற அடிப்படையில் இந்த முடிவு எடுத்தால் அது எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.