மாநில செய்திகள்
93-வது பிறந்தநாள் விழா: “எம்.ஜி.ஆர். எனும் சிற்பத்தை அழகாக செதுக்கியவர், ஆர்.எம்.வீரப்பன்”

ஆர்.எம்.வீரப்பன் 93-வது பிறந்தநாள் விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், “எம்.ஜி.ஆர். எனும் சிற்பத்தை அழகாக செதுக்கி தந்தவர் ஆர்.எம்.வீரப்பன்” என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டினார்.
சென்னை,

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 93-வது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், தொழில் அதிபர் பழனி ஜி.பெரியசாமி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ஆர்.எம்.வீரப்பனுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசு வழங்கியும் சிறப்பித்தார்.

விழாவில், முன்னாள் மத்திய மந்திரியும், ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவன செயலருமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது:-

93 வயதிலும் கம்பன் கழகத்தை காத்துவரும் ஒப்பற்ற பெருந்தகை ஆர்.எம்.வீரப்பன். திராவிட இயக்க வரலாற்றை தன் தோளில் சுமந்து இருக்கும் மு.க.ஸ்டாலினின் இதயத்தில் ஒருபாதி அண்ணாவும், இன்னொரு பாதி கருணாநிதியும் தான் இருப்பார்.

‘எல்லாமே தனக்கு எம்.ஜி.ஆர்’ என்று வாழ்ந்து, அவர் அருகிலேயே இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அ.தி.மு.க.வுக்கு உரிமை கொண்டாடும் முழுமையான தகுதி அவருக்கு உண்டு.

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் ஆர்.எம்.வீரப்பனுக்கு, தங்க மோதிரத்தை எம்.ஜி.ஆரே அணிவித்து மகிழ்ந்தார். ‘தனது மரணத்துக்கு பின்னரே அந்த மோதிரத்தை கழற்ற வேண்டும்’ என்று உறுதியோடு, இன்றுவரை அந்த மோதிரத்தை தன் விரலில் இருந்து கழற்றாமல் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்.ஜி.ஆர். எனும் ஒரு அழகிய சிற்பத்தை செதுக்கி தமிழக மக்களுக்கு தந்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான். தான் கொண்ட கொள்கையிலும், நிலைப்பாட்டிலும் சமரசம் செய்யாதவர். முதல்-அமைச்சராகும் வாய்ப்பு வந்தபோதும், அதை மறுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவ்வாறு அவர் பேசினார்.

திருநாவுக்கரசர் பேசுகையில், “ஆர்.எம்.வீரப்பன், நான் எம்.எல்.ஏ. ஆவதற்கு உறுதுணையாக இருந்தார். அ.தி.மு.க. எனும் கட்சி உருவாவதற்கு கட்டமைப்பை ஏற்படுத்தி தந்தார். கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக அதிகமான தலைவர்களை உருவாக்கிய சிறப்புக்கு சொந்தக்காரர். சிறந்த பேச்சாளர். அவர் நீண்டகாலம் வாழவேண்டும்” என்றார்.

விழாவில் ஆர்.எம்.வீரப்பனின் மகன்கள் செல்வம், தங்கராஜ், மகள்கள் செல்வி, செந்தாமரை, தமிழரசி, மருமகனும், படத்தயாரிப்பாளருமான சத்யஜோதி தியாகராஜன், பேத்தி அபிராமி, எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், அமைப்பு செயலாளர் கலைவாணன் உள்பட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எம்.வீரப்பனின் பேரன் அருண்குமார் செய்திருந்தார்.