மாநில செய்திகள்
சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் 206 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம்,

சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யோகசேரன் (வயது 55). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ரெப்போ வங்கியில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி.

இவர்களுக்கு திலகன் என்ற மகனும், செந்தமிழ்காவியா என்ற மகளும் உள்ளனர். திலகன், பல் டாக்டர் ஆவார். செந்தமிழ் காவியாவுக்கு திருமணமாகி கணவருடன் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார்.

யோகசேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவரது வீட்டில் மதுரையைச் சேர்ந்த ராணி என்ற பெண், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டின் மாடியில் யோகசேரன், தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் உள்ள வீட்டில் வேலைக்காரி ராணி வசித்து வருகிறார்.

மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட செந்தமிழ் காவியா, தனது 175 பவுன் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக நேற்று மதியம் தனது தாய் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டில் யோகசேரன், சுப்புலட்சுமி மட்டும் இருந்தனர். திலகன் வீட்டில் இல்லை. நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டு வேலைக்கார பெண் ராணி, மாடிக்கு சென்று கதவை தட்டினார். யோகசேரன் கதவை திறக்கவும் அவர் உள்ளே சென்றார்.

அப்போது திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். முகத்தில் முகமூடி அணிந்து இருந்த அவர்கள், கத்தி கூச்சலிட்டால் கொன்று விடுவோம் என்று தங்கள் கையில் இருந்த கத்தியை காட்டி யோகசேரனை மிரட்டினர்.

பின்னர் யோகசேரன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, வேலைக்கார பெண் ராணி ஆகிய 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டி தாங்கள் தயாராக கொண்டு வந்த சணலை கொண்டு கைகளை கட்டினர். சத்தம் போடாமல் இருக்க 3 பேரின் வாயில் துணியை வைத்தும் அடைத்தனர்.

அதன்பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்த கொள்ளையர்கள், அதில் லாக்கரில் வைக்கும்படி கூறி அவரது மகள் செந்தமிழ்காவியா கொடுத்துச்சென்ற 175 பவுன் நகைகள் மற்றும் சுப்புலட்சுமி அணிந்து இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 206 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த நகைகளை தாங்கள் கொண்டு வந்த ஒரு பையில் போட்டுக்கொண்டனர். நாங்கள் தப்பிச்செல்லும் வரையில் யாரும் கத்தி கூச்சலிடக்கூடாது. மீறி கத்தினால் கொன்று விடுவோம் என்று மீண்டும் மிரட்டி விட்டு, நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு யோகசேரன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்னை தெற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதாகவும், கொள்ளையர்களில் 2 பேர் காதில் கடுக்கன் அணிந்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள், செந்தமிழ் காவியாவை பின்தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது வங்கி மேலாளர் என்பதால் வீட்டில் நகை, பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்து கைவரிசையை காட்டினரா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்து சென்றவர்கள் குறித்து அந்த பகுதியை சுற்றி சாலைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் யாருடனாவது செல்போனில் பேசினார்களா? என அந்த நேரத்தில் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.