ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-09-10 00:30 GMT
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதி களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் பாண்டியராஜன் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருப்பதால், அவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மாலை 4 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஸ்ரீதரன் என்கிற முருகன், சுதந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் பேரறிவாளனின் மனுவை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 பேரும் முன் விடுதலை மனுக்களை கவர்னர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களையும் சேர்த்து 7 பேரையும் முன் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்படி சட்டப்பிரிவின் படி கவர்னருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 7 பேரை விடுவிக்கும் முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளதா?

பதில்:- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

கேள்வி:- சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க 161-வது சட்டப்பிரிவு உதவும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- சி.பி.ஐ. விசாரணை, கைது என்பதெல்லாம் முடிந்த கதை. நமக்கு தற்போதைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே முக்கியம். நீதியின் உயரிய கோட்பாடு சுப்ரீம் கோர்ட்டுதான். அந்த அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறது. தீர்ப்பும் இதை தெளிவாக கூறுகிறது. உச்சபட்ச தீர்ப்பே கிடைத்திருக்கும்போது வேறு என்ன வேண்டும்?

கேள்வி:- இந்த பரிந்துரை எப்போது கவர்னருக்கு வழங்கப்பட இருக்கிறது?

பதில்:- அமைச்சரவை கூட்டம் விடுமுறை தினத்தில் கூட்டப்பட்டு உள்ளது என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த பரிந்துரை உடனடியாக கவர்னரிடம் வழங்கப்படும்.

கேள்வி:- மத்திய அரசின் ஆலோசனையை கேட்காமல் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா?

பதில்:- இதில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி உள்ளது. அமைச்சரவையின் முடிவை கவர்னர் ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். எனவே இந்த முடிவை அவர் ஒத்துக்கொள்வார்.

மாநில அரசின் அதிகாரம் தெளிவாக உள்ள நிலையில் கவர்னர் இந்த பரிந்துரையை நிச்சயம் ஏற்பார். இதை அவர் மறுக்க முடியாது. மாநில அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய பொறுப்பாளர் கவர்னர்தான். எனவே அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அவரது முக்கிய கடமை ஆகும்.

கேள்வி:- தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்வாரா?

பதில்:- அப்படி வாய்ப்பு இல்லை. அவர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 2016-ம் ஆண்டு இதேபோல் மீண்டும் ஒரு முயற்சி மேற்கொண்டார். எனவே மக்கள் கோரிக்கையான இந்த பரிந்துரையை அன்றைக்கே மத்திய அரசு ஏற்று இருக்கவேண்டும். எனவே மக்கள் விரும்பும்படியும், ஜெயலலிதாவின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்