பழனி அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பொக்லைன் எந்திரம் மீது ரெயில் மோதியது

பழனி அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பொக்லைன் எந்திரம் மீது ரெயில் மோதியது.

Update: 2018-09-10 21:15 GMT
பழனி, 

பழனி அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பொக்லைன் எந்திரம் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை நோக்கி நேற்று முன்தினம் இரவு அமிர்தா விரைவு ரெயில் புறப்பட்டு வந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு பழனி அருகே கணக்கன்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற பொக்லைன் எந்திரம் ஒன்று ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. ஆனால் கண்இமைக்கும் நேரத்தில் விரைவு ரெயில் பொக்லைன் எந்திரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொக்லைன் எந்திரம் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரெயில் என்ஜின் மற்றும் முதல் பெட்டியில் சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பொக்லைன் எந்திரத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சத்திரப்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் ஹரீஷ் (வயது 25) மற்றும் உடன் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே விபத்து நடந்ததும் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்திரப்பட்டி மற்றும் பழனி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொக்லைன் எந்திர டிரைவர் ஹரீஷ் ஹெட்போனை காதில் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டபடியே அதனை ஓட்டி வந்துள்ளார். இதனால் ரெயிலின் ஹாரன் ஒலி சத்தம் அவரது காதில் விழவில்லை. மேலும், ரெயில் டிரைவர் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்து சைகை செய்தும் பலன் இல்லை. பொக்லைன் எந்திர டிரைவரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய ரெயிலின் என்ஜின் மற்றும் முதல் பெட்டியில் சேதம் ஏற்பட்டது. மேலும் என்ஜின் சக்கரங்களில் பிரேக் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள கருவியும் சேதம் அடைந்தது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு சுமார் 1 மணி நேரம் தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்