ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை அரசு தான் வெளியிட்டது அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல் பேட்டி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் தமிழக அரசுதான் வெளியிட்டது என அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல் மஹிபுனா பாட்ஷா கூறினார்.

Update: 2018-09-10 22:45 GMT
சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் தமிழக அரசுதான் வெளியிட்டது என அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல் மஹிபுனா பாட்ஷா கூறினார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்லோ தலைமை நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் கையெழுத்து போட்டவர் என்ற அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.

சுப்பையா விஸ்வநாதனிடம் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறுநாள் அதாவது, 2016 செப்டம்பர் 23-ந் தேதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையும், ஜெயலலிதா மறைந்த பின் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் தொடர்பான பதிவேட்டில் உள்ள தகவல்களும் ஒத்துபோகவில்லையே? அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ளவை உண்மையா? அல்லது டிஸ்சார்ஜ் பதிவேட்டில் குறிப்பிட்டு இருப்பது உண்மையா? என சரமாரியாக கேள்விகளை ஆறுமுகசாமி எழுப்பினார்.

இந்த நிலையில் மறு விசாரணைக்காக ஜெயலலிதாவின் தனி செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் நேற்று விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதே போன்று அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராஜ் பிரசன்னா, இதயநோய் சிகிச்சை வழங்கிய அப்பல்லோ டாக்டர் சாய் சதீஷ் ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். இதில் டாக்டர் ராஜ் பிரசன்னாவிடம் நேற்று விசாரணை நடத்தப்படவில்லை.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல் மஹிபுனா பாட்ஷா கூறியதாவது:-

ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் அவரது உடல்நலம் குறித்து தமிழக அரசு தான் பத்திரிகை செய்தி வெளியிட்டது என்றும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தான் வெளியிடப்பட்டதாகவும், அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் வெளியிடப்படவில்லை என்றும் ராமலிங்கம் விசாரணை ஆணையத்தில் ஒப்புக்கொண்டு உள்ளார்.

முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பது மக்கள் தொடர்பு துறையின் கடமை. இதனை தனியார் நிறுவனமான அப்பல்லோ ஆஸ்பத்திரி செய்ய முடியாது. அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் எதுவும் வெளியிடவில்லை. அரசாங்கம் தான் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து இந்த நேரத்தில் வெளிப்படையாக எல்லா கருத்துகளையும் தெரிவிக்க முடியாது. மருத்துவ அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அப்பல்லோ நிர்வாகம் கூறியபடி வெளியிடப்பட்டதா? இல்லையா? என்பது பற்றி அடுத்த வாரம் நடைபெற உள்ள விசாரணையில் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்