மாநில செய்திகள்
ராஜீவ் கொலை கைதிகள் வழக்கு: ‘மனிதநேய அடிப்படையில் கவர்னர் விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும்’நல்லகண்ணு-பழ.நெடுமாறன் கோரிக்கை

‘ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் தமிழக கவர்னர் விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று நல்லகண்ணு, பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, 

‘ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் தமிழக கவர்னர் விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று நல்லகண்ணு, பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யும் வழக்கு விசாரணை கடந்த மாதம் 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து கடந்த 6-ந் தேதி நடந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம், அதை கவர்னரும் பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தது. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் தமது அமைச்சரவைகளின் உதவியுடனும் ஆலோசனையுடனும் மட்டுமே செயல்படுவார்கள். நேரடியாக அரசால் கவர்னருக்கு வழங்கப்படும் ஆலோசனைக்கு இணங்கவே, கவர்னர் செயல்படவேண்டும் என்று விதி உள்ளது.

வாழ்வின் வசந்த காலமான இளமைப் பருவத்தை சிறையில் தொலைத்துவிட்ட இந்த 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தமிழக அமைச்சரவைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 1999-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் படி, அமைச்சரவைக்குள்ள இந்த அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 பேரையும் விடுதலை செய்ய உறுதி பூண்டிருந்தார். அதில் குறுக்கிட்ட தடைகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டன.

தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த மனித நேய நடவடிக்கையை ஏற்று மக்கள் விருப்பத்தை மதித்து தனது அறக்கடமையை கவர்னர் காலம் தாழ்த்தாமல் விரைவாக அறிவிப்பார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, 7 பேரையும் விடுவிக்க அமைச்சரவைக் கூட்டம் ஒருமனதாக முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் ஏற்று, காலதாமதமின்றி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இது பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். தற்போது, ஏதாவது காரணங்களை தேடி கண்டுபிடிப்பு என்ற பெயரால் காலதாமதம் செய்யாமல், உடன் விடுதலை செய்திட வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் அமைச்சரவையின் முடிவை வரவேற்றும், அமைச்சரவை முடிவை கவர்னர் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.