மாநில செய்திகள்
தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள்: இரவுப்பணியில் பெண்களுக்கு மகளிர் கண்காணிப்பாளர் மூலம் பாதுகாப்பு

இரவுப்பணியில் பெண்களுக்கு மகளிர் கண்காணிப்பாளர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை - 2018-ஐ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் கொள்கையானது, மனித வளத்தினை பேணுவதிலும், நிறுவனங்களை அமைப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால் 2018-ம் ஆண்டிற்கான ஐ.சி.டி. கொள்கையானது முதலீடுகளை ஈர்ப்பதோடு நின்றுவிடாமல் அறிவாற்றல் சார்ந்த முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற வளர்ச்சியோடு அனைத்து பிரிவுகளில் வளர்ச்சியை வழங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கிடும் வகையிலும் இப்புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கொள்கையில் உள்ளபடி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கிராமப்புற வணிக வெளிப்பணிக் கொள்கையில் திறன் மேம்பாட்டிற்கான உதவி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்த அரசால் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன் மேம்பாட்டை அளிப்பதற்கும், சிறப்பு மேம்பாட்டு மையங்களை உருவாக்குவதற்கும் ஏதுவாக தொழில் நிறுவனங்களை கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் மற்றும் வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் தொழில் முனைவோர் மையம் அமைக்க அரசாணைகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கொள்கையில் வணிக நுண்ணறிவு மென்பொருள் மற்றும் பகுப்பாய்வு, தரவு கிடங்கு, மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சி, கணினி தமிழ், தரவு மையம் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மற்றும் புதிதாக தொடங்கப்படும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதி உதவி வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் 50 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களில், பெண் பணியாளர்களுக்கு ஆண்டு பயிற்சி உதவி ரூ.5 ஆயிரம், ஆண் பணியாளர்களுக்கு ஆண்டு பயிற்சி ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த நிதி உதவி ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வழங்கப்படும்.

தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் துறையைச் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆயிரம் சதுரஅடி முதல் 5 ஆயிரம் சதுரஅடி வரை அலுவலக கட்டிட இடத்தை குத்தகை வாடகை அடிப்படையில் எடுத்துள்ள தொழில் முனைவோருக்கும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அவர்கள் செலுத்தும் வாடகையில் 10 சதவீதம் வரை மானியமாக, ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வழங்கப்படும்.

சிறிய தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு அரசு தேவையான உதவிகளை வழங்கும். மேலும் ரூ.5 கோடி முதல் ரூ.50 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.30 லட்சம் மூலதன மானியமும், வணிக ரீதியான செயல்பாடு தொடங்கிய நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பின் மின்சார வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும்.

ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி முதலீட்டில் 500 முதல் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.60 லட்சம் மூலதன மானியமும், வணிக ரீதியான செயல்பாடு தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பின் மின்சார வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும்.

ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி முதலீட்டில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி மூலதன மானியமும், வணிக ரீதியான செயல்பாடு தொடங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்குப் பின் மின்சார வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும்.

ரூ.200 கோடி முதல் ரூ.500 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.1½ கோடி மூலதன மானியமும், வணிக ரீதியான செயல்பாடு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பின் மின்சார வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 4 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். பல்வேறுபட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஆண்டுப் பொது அறிக்கை தாக்கல் செய்வதை அறிமுகம் செய்து பதிவேடுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

சிறப்பு பொருளாதார பகுதிகளுக்கு கட்டுமான தளப்பரப்பு அளவீடு தளர்த்தப்படும். சிறப்பு பொருளாதார பகுதிகள் அல்லாத இடங்களுக்கும் கட்டுமான தளப்பரப்பு அளவீடு தளர்த்தப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகார எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளில் இதேபோன்ற விதிமுறை இயற்றப்படும். சர்வதேச அளவிலான போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் தொழிலாளர்களுக்கு அயல்நாட்டு மொழிகளில் திறன் மேம்படுத்தப்படும்.

நிறுவனங்கள் சட்டம்-2013-ன்படி சமூகக் கூட்டாண்மை பொறுப்புக்கான வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.

முன்பு தொழில் தொடங்க கட்டணம் அடிப்படையிலான சேவைக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒற்றைச் சாளரமுறையில் இசைவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்புதிய கொள்கையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம், சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி., டி.என்.எப்.ஆர்.எஸ்., டி.என்.பி.சி.பி., சி.எம்.எஸ்.எஸ்.பி. மற்றும் ஏ.ஏ.ஐ. போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் ஒற்றை சாளரமுறையில் இசைவு வழங்கப்படும்.

இப்புதிய கொள்கையின்படி, பெண்களுக்கு இரவு நேர பணியில் பணிபுரிய வாய்ப்பும், கூடவே தகுந்த பாதுகாப்பும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரவு பணியில் பெண்களை பணியமர்த்தும்போது அதற்கேற்றவாறு உரிய பாதுகாப்பு, தங்கும் வசதி, ஓய்வெடுக்கும் வசதி, போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவேண்டும்.

இரவு பணியில் பெண்களை அமர்த்தும்போது அவர்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் பதவியில் பெண்களே கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு பெண் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்.

பணிபுரியும் இடத்தில் பாலியல் ரீதியாக இழைக்கப்படும் கொடுமைகளை களைவதற்காக குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்பு வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்திடும் வகையில் புதிய அம்சங்கள் இக்கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இப்புதிய கொள்கையானது தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் மேம்படுத்தி தேசிய அளவில் முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்ற உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.