‘பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம்’ தம்பிதுரை பேட்டி

பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டுவர அனுமதிக்கமாட்டோம் என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறினார்.

Update: 2018-09-10 20:15 GMT
ஆலந்தூர், 

நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. எம்.பி. யுமான தம்பிதுரை சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களை பாதிக்கின்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி. மு.க. ஆதரிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். விலையை நிர்ணயிக்க கூடிய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே பெற வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு பல வரிகளை விதிக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கையை தற்போதைய மத்திய அரசும் பின்பற்றுகிறது. வரிகளை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். மத்திய அரசு வரியை குறைந்தாலே பெட்ரோல், டீசல் விலை தானாக குறைந்துவிடும்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது. இப்படி இரட்டை வேடம் போடுகிறவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தரவேண்டிய அவசியம் இல்லை.

பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) கீழ் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம். மாநில அரசுகளுக்கு சில உரிமைகள் உள்ளன. மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வந்து விட்டால் மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலை ஏற்படும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எந்தவிதத்திலும் அனுமதிக்காது. ஜெயலலிதா எடுத்த முடிவின்படி, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்