குட்கா ஊழல் வழக்கு: ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. காவல்

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

Update: 2018-09-10 23:45 GMT
சென்னை, 

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர்களை, 14-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

அப்போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதவராவ் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், தங்களை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதன்பின்பு நடந்த விவாதத்தின் போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்து. ஆனால், மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் தடையை மீறி தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தடை அமலில் இருந்த போதே குட்கா ஆலைகளின் உரிமம் 2 முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மாதம் ரூ.2½ லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். கலால் துறை அதிகாரி மீதும் கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இதுதவிர சி.பி.ஐ. நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மாதவராவ் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது, ‘மாதவராவ் உள்பட 5 பேரையும் கைது செய்வதற்கு முன்பு முறையாக சம்மன் வழங்கி இருக்க வேண்டும். அதுபோன்று எந்த சம்மனும் கொடுக்காமல் 5-ந் தேதி காலையில் இவர்களை கைது செய்தபோதும் 6-ந் தேதி மாலை தான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது. மாதவராவ் உள்ளிட்ட 5 பேரிடமும் போதுமான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்களை சி.பி.ஐ. காவலுக்கு அனுமதிக்கக்கூடாது’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாதவராவ் உள்பட 5 பேரையும் 14-ந் தேதி காலை 11 மணி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர்கள் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதனிடையே மாதவராவின் உதவியாளர்கள் 4 பேருக்கு, சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். அதனை ஏற்று 4 பேரும் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்கள்.

அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் நீண்ட நேரமாக துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாதவராவின் உறவினர்கள் 2 பேரும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களிடமும் சி.பி.ஐ. போலீசார் தனியாக விசாரித்தனர்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் மாதவராவுக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. அந்த ஆலையிலும் சி.பி.ஐ. நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்