‘மனம்போன போக்கில் பொய்களை பரப்புவது ராகுல்காந்தியின் வாடிக்கை’ ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை செயலாளர் குற்றச்சாட்டு

மனம்போன போக்கில் பொய்களை பரப்புவது ராகுல்காந்தியின் வாடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-09-11 22:23 GMT
சென்னை,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய இணை செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எகிப்தில் உள்ள முஸ்லிம் பிரதர்ஹூட் என்கிற தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட செய்த முயற்சி, தேசிய கொள்கை உடையவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி முழுவதும் அறிந்தோர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்த்தது போலவே கம்யூனிஸ்டு மற்றும் மாவோயிஸ்டு சிந்தனையாளர்கள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ராகுல்காந்தியின் இந்த கருத்தை கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த உலகில் நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகள் செய்துவரும் தொண்டுகள் குறித்தும் நிச்சயம் தெரியாமல் இருக்காது. சமுதாயத்தில் உள்ள பலதரப்பட்ட மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெருகிவரும் ஆதரவு பற்றியும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார். இருப்பினும் அவர் எதனால் இப்படிப்பட்ட ஒரு ஒப்பீடு குறித்து பேசினார்?.

காரணம் ஒன்றே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி அவதூறு செய்திகள் பரப்பினால் மட்டுமே, அரசியல் லாபம் அடைய முடியும் என்று அவரது அரசியல் ஆலோசகர்கள், ராகுல்காந்திக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்ட காங்கிரஸ், மீண்டும் தலைநிமிர இதுபோன்ற அவதூறு பரப்புரைகளால் மட்டுமே முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே, செய்தியின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளாமல், மனம்போன போக்கில் பொய்களை பரப்புவதை ராகுல்காந்தி வாடிக்கையாக கொண்டுவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, நமது சமுதாயத்தை முழுமையாக ஒருங்கிணைத்து ஆன்மிகம் கலந்து நமது கலாசாரத்துடன் பிணைக்கும் உயரிய பணியை செய்துவருகிறது. ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க செய்யும் பணியை முஸ்லிம் பிரதர்ஹூட் இயக்கத்துடன் ஒப்பீடு செய்வது நமது கலாசாரம் மற்றும் வரலாற்றுக்கு செய்யும் அவமரியாதை ஆகும்.

காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் நல்ல தேசிய சிந்தனையுடன் இருந்தார்கள். தேசத்துக்கு எதிராக பேசும் யாருக்கும் ஆதரவு அளித்தது இல்லை. ஆனால், இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தேச நலன் குறித்து சிந்திக்காமல் இருக்கிறார்கள்.

மிக பழமையான காங்கிரஸ் கட்சி, தேச விரோதிகளுடன் நேசக்கரம் நீட்டுவது என்பது மிகவும் அபாயகரமானது, கவலையளிக்கக்கூடியது. இதன் காரணமாகவே அந்த கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு நிச்சயம் இடம் உண்டு.

ஆனால், தேச நலன் என்று வரும்பொழுது இந்த வேறுபாடுகளை களைந்தால் மட்டுமே, தேசத்தின் நலம் காக்கப்படும். அரசியல் லாபங்களை கடந்த ஒருமையுணர்வு வந்தால் மட்டுமே, நமது நாட்டில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். அப்பொழுது தான் சுவாமி விவேகானந்தர் விரும்பிய புகழோங்கிய பாரதம் பிறக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்