மாநில செய்திகள்
கவர்னரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? இல்லையா?ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்சந்த் மீனாவின் வாக்குமூலத்தால் சர்ச்சை

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்சந்த் மீனாவின் வாக்குமூலத்தால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா கவர்னரை பார்த்து கை அசைத்தாரா? இல்லையா? என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தமிழக முன்னாள் கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்சந்த் மீனா நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் என 6 மணி நேரம் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார்.

ஜெயலலிதா சிகிச்சையின்போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஆணையத்தின் வக்கீல்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகளை தொடுத்தனர். விசாரணை முடிவில், சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்சந்த் மீனாவிடம் ஆணையம் விசாரணை நடத்தியபோது, 2016 அக்டோபர் 1 மற்றும் 22-ந் தேதிகளில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை கவர்னர் பார்த்தார் என்பதை அவர் சாட்சியமாக குறிப்பிட்டார். குறிப்பாக 22-ந் தேதி கவர்னர் பார்த்தபோது, ஜெயலலிதா அமர்ந்து இருந்ததாகவும், கவர்னரை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டியதாகவும் கவர்னர் தன்னிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தார் என்றும் சாட்சி அளித்துள்ளார்.

இதன்மூலம் ஜெயலலிதா கோமாவில் இருந்தார், உயிரோடு இல்லை என்றெல்லாம் கூறப்பட்டுவந்த விஷயங்கள் அனைத்தும் பொய் என்பது தெளிவாகி உள்ளது.

கவர்னர் ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தாரா? அல்லது நேரடியாக பார்த்தாரா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, கவர்னர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த தீவிர சிகிச்சை பிரிவு அறைக்குள் சென்றார். அவர் கண்ணாடி வழியாக பார்த்தாரா? நேரடியாக பார்த்தாரா? என்பது எனக்கு தெரியாது. பின்னர் காரில் செல்லும்போது மேற்கண்ட தகவலை தெரிவித்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

2016 அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் ஜெயலலிதாவை பார்த்தபோது, சிகிச்சை பெற்றபடி படுத்தநிலையில் இருந்ததாக தெரிவித்து உள்ளார். அரசு வெளியிட்ட செய்திக்குறிப்புகள் குறித்தும் ரமேஷ்சந்த் மீனாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜெயலலிதாவின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் மக்களின் மனநிலையை கருத்தில்கொண்டு, மக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முழுவதுமான தகவல்களை வெளியிடாமல், சிகிச்சை தொடர்பான உடல்நிலை குறித்த விஷயங்களை மட்டும் செய்திக்குறிப்பில் வெளியிட்டோம் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தலைமை செயலாளரிடமும், டாக்டர் பாலாஜியிடமும் கவர்னர் அவ்வப்போது கேட்டு தெரிந்துகொண்டார் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தில் கவர்னர் அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்க்கும்போது தான் உடன் இருந்ததாகவும், கவர்னர் கண்ணாடி வழியாக பார்த்தபோது ஜெயலலிதா பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்ததால் கவர்னரை பார்த்து கை அசைக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

தற்போது ரமேஷ்சந்த் மீனா ஜெயலலிதா கவர்னரை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டினார் என்று கூறியுள்ள நிலையில், கவர்னரை பார்த்து ஜெயலலிதா கையை அசைத்தாரா? இல்லையா? என்ற விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது. எனவே, முன்னாள் கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவை அழைத்து விசாரித்தால் மட்டுமே இந்த விவகாரத்தின் உண்மை தெரியவரும் என்று ஆணையம் கருதுகிறது.

எனினும், சட்டத்தின்படி ஜனாதிபதியையோ, கவர்னரையோ விசாரிக்க முடியாது. எனவே இதுகுறித்து ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) ஆணையத்தில் ஆஜராக உள்ள அப்பல்லோ தலைமை பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராஜ் பிரசன்னாவிடம் கைகாட்டிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.

டாக்டர் ராஜ் பிரசன்னா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர். எனினும், அவர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்படவில்லை. இன்று அவர்கள் 2 பேரிடமும் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.