சிறையில் இருந்து கைதிகளை விடுவிக்க போலி ஜாமீன் உத்தரவு தயாரித்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்

சிறையில் இருந்து தனக்கு வேண்டிய கைதிகளை விடுவிக்க ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் போலி ஜாமீன் உத்தரவு தயாரித்து கொடுத்தது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-09-11 22:52 GMT
தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிறையில் அடைப்பு

இந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் சொருகி இருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் 2 ‘டம்மி’ துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரை பெரியகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், 25-ந் தேதி பெரியகுளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ‘புல்லட்’ நாகராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி சிறையில் உள்ளனர். எனவே ‘புல்லட்’ நாகராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி அவரை வேலூர் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர்.

போலி ஜாமீன் உத்தரவு

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

நீதிபதி பெயரில் ‘புல்லட்’ நாகராஜன் போலியான ரப்பர் ஸ்டாம்ப் வைத்துள்ளார். அதை வைத்து போலியாக ஜாமீன் உத்தரவு தயாரித்து, தனக்கு வேண்டிய சிறைக்கைதிகளை சிறையில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைகளில் உள்ள ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

ராணுவ வீரர் மகன்

‘புல்லட்’ நாகராஜனின் தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் ராணுவ வீரராக இருந்தவர். ‘புல்லட்’ நாகராஜனின் மனைவி சுசீலா (50). இவர், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மனைவியும், மகளும் சென்னையில் வசிப்பதாக தெரிகிறது.

நாகராஜன், ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்டதால் ‘புல்லட்’ நாகராஜன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

சென்னையில் 34 வழக்குகள்

‘புல்லட்’ நாகராஜன் 1992-ம் ஆண்டு நகை பறிப்பில் ஈடுபட தொடங்கினார். போலீசார் தேடுவதை அறிந்து, சென்னைக்கு வந்தார். சென்னையிலும் நகை பறிப்பில் ஈடுபட்டார். சென்னையில் மட்டும் அவர் மீது 34 வழக்குகள் உள்ளன. தனது அண்ணன் ரமேசை சிறையில் போலீசார் தாக்கியதால் சிறைத்துறை பெண் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டதாக போலீசாரிடம் ‘புல்லட்’ நாகராஜன் கூறியுள்ளார்.

‘புல்லட்’ நாகராஜன் வெளியூர்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு போலீசில் சிக்கினால் தனது பெயரை மாற்றிச்சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சென்னை அடையாறு, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் ராஜ்சங்கர், புல்லட் நாகன் என்ற பெயரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அடையாறு, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் மதுரையில் உள்ள வெவ்வேறு தெருக்களின் பெயரை முகவரியாக கொடுத்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்