புவி வெப்பமயமாதலால் தமிழக கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து

புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.

Update: 2018-09-12 07:52 GMT
சென்னை

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை காரணமாக உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது மனிதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள். இந்நிலையில் சென்னை, நாகை மாவட்டங்கள் கடலில் மூழ்கும் என்று தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் கேரளா உள்பட 6 மாநிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை வரமாக பாதுகாப்பாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இது கடந்த 2011ல் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதன்படி, மேற்குத் தொடர்ச்சி மலையை 4 மண்டலங்களாக பிரித்து, அதில் முதல் 3 மண்டலங்களில் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது. மேலும் குடியேற்றங்களை அனுமதிக்கக் கூடாது. இயற்கைக்கு எதிரான எந்தவொரு செயல் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. 

ஆனால் கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநில அரசுகள் இதை ஏற்க மறுத்தன. இதன் விளைவு தான், சமீபத்தில் இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட பேரழிவு ஆகும். இதேபோன்ற ஆபத்து கோவா மாநிலத்திற்கும் இருப்பதாக மாதவ் காட்கில் எச்சரித்துள்ளார். சென்னையைப் பொறுத்தவரை, நாட்டிலேயே விரைவாக வெள்ள நீர் வெளியேற உதவும் வடிகால் வசதி இருக்கிறது.

வட சென்னையில் கொசஸ்தலை, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் ஆகிய ஆறுகளும், 16 பெரிய நீரோடைகளும் இருக்கின்றன. இருப்பினும் 2015ல் பெருவெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டது. இதற்கு முறையான பராமரிப்பு இன்மைதான் காரணம். 

2016ல் சென்னை வர்தா புயலில் வீழ்ந்த மரங்கள் அனைத்தும் வெளிநாட்டைச் சேர்ந்தவை. நம் நாட்டு இனங்களான வேம்பு, அரசு உள்ளிட்டவை ஒன்று கூட விழவில்லை. 

புவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. நாகையில் மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படும். நிலமட்டம் தாழ்வதால் கடல்நீர் உட்புகுந்து, பேரழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இயற்கையை அழித்து, குவாரிகள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் செயல் படுத்துவதால் பூமியின் அடித்தளம் பாதிக்கப்பட்டு விரைவில் கடல்நீர் புக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக கடலோர பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறி உள்ளது.

மேலும் செய்திகள்