மருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவி கனிமொழிக்கு கமல்ஹாசன் நிதியுதவி

மருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு கமலஹாசன் ரு. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

Update: 2018-09-12 14:33 GMT
சென்னை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி மல்லிகா தம்பதியின் மகள் கனிமொழி, 21. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 2014ம் ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண் பெற்றார். 191.05, 'கட் ஆப்' பெற்ற கனிமொழிக்கு, இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு கிடைத்தது. 

டாக்டர் கனவில் இருந்த கனிமொழிக்கு படிப்பை தொடர முடியாமல், வறுமை தடைக் கல்லானது. கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாமல் திணறினார். கனிமொழியின் நிலையை அறிந்த, பெரம்பலூரின் அப்போதைய கலெக்டர் தாரேஷ்அஹமது, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கி உதவினார். 

மாணவியின் தந்தை பிச்சைமணி, கூலி வேலைக்கு சென்றும், கடன் வாங்கியும், மகளின் படிப்புக்கு, கட்டணம் செலுத்தி வருகிறார்.  இருப்பினும், மாணவி கனிமொழி, விடுமுறை நாட்களில், விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருகிறார்.  

 இது குறித்து கனிமொழி கூறுகையில்,

வரும் பிப்ரவரி மாதம், இறுதித் தேர்வு நடக்க உள்ள நிலையில், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறேன். எப்படியாவது டாக்டராகி, மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறினர்.

அவருக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில்  மருத்துவப்படிப்பை தொடர முடியாமல் தவித்த பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு கமலஹாசன் ரு. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.  மாணவி கனிமொழி மருத்துவ படிப்பை தொடர பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வரும் நிலையில் கமல்ஹாசன் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்