‘சில அரசியல் புற்கள் ஆகாய கோட்டை கட்டி அரியணை கனவில் மிதக்கின்றன’ அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

‘சில அரசியல் புற்கள் ஆகாய கோட்டை கட்டி அரியணை கனவில் மிதக்கின்றன’ என்று மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கடுமையாக தாக்கி அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.;

Update:2018-10-01 04:30 IST
சென்னை, 

‘சில அரசியல் புற்கள் ஆகாய கோட்டை கட்டி அரியணை கனவில் மிதக்கின்றன’ என்று மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கடுமையாக தாக்கி அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

ஆகாயகோட்டை

அருகம்புல்கள் ஆலமரமாக வளர ஆசைப்பட கூடாது. அது முடியவும் முடியாது. ஏனெனில் இன்னொன்றின் நிழலில் மட்டுமே அவை வளரும். சொந்தமாக வளர்ந்து சூறைக்காற்றுடன் மோதி ஓங்கி நிற்க முடியாது. அப்படிப்பட்ட சில அரசியல் புற்கள் ஆகாய கோட்டை கட்டி அரியணை கனவில் மிதக்கின்றன.

இந்திய தண்டனை சட்டத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதோ, அத்தனை பிரிவுகளிலுமே சிக்கி வாய்தா வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அற்ப பதர்கள். அ.தி.மு.க.வை விமர்சிக்கவோ, ஜெயலலிதா பேரை சொல்லவோ இவர்களுக்கு தகுதி கிடையாது. பிழைக்க தமிழகம் வந்தவர்கள், இன்று காசு கொடுத்து ஆங்காங்கே கூட்டத்தை கூட்டி பிரமாண்டம் என்கிறார்கள். உத்தமபுத்திரன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், உங்கள் தலைமேல் இருக்கும் அமலாக்கத்துறையினரின் வழக்குகளை கவனியுங்கள்.

அரசியல் அரிதாரம்

சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்து, 2-வது இன்னிங்சில் ஜெயிக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு, அரசியல் அரிதாரம் பூசி சிலர் வந்திருக்கின்றனர். ஒரு முடிவை உருப்படியாக எடுக்கத்தெரியாதவர் தான், இன்று தன்னால் எம்.ஜி.ஆர். ஆட்சியை தரமுடியும் என்று பேசிவருகிறார்.

இன்னொருவர் இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார்? என்று அவருக்கும் தெரியாது, யாருக்குமே புரியாது. தனி அகராதி வைத்து தான் அவரது பேச்சுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட ஒருத்தர் தான் இன்றைக்கு மய்யமாக வந்து நிற்கிறார். தன் படத்தை ரிலீஸ் பண்ண முடியாத சூழ்நிலையாலேயே கட்சி ஆரம்பித்த ஒரே நடிகர் அவர்.

உங்களை போன்றவர்களுக்கு கருத்து சொல்லக் கூட தகுதி கிடையாது. சினிமாவில் உங்கள் நடிப்பு எடுபடலாம், அரசியல் எடுபடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.தம்பிதுரை

விழாவில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேசுகையில் கூறியதாவது:-

‘எங்கள் தங்கம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதுகிறார், ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று, அடுத்த வரியை அவரால் எழுத முடியாத நேரத்தில், இன்னொருவர் அடி எடுத்துக் கொடுக்கிறார், ‘நான் அளவின்றி கொடுப்பவன்’.

அந்த வரியை எடுத்துக் கொடுத்தது யார் என்றால்? ‘எங்கள் தங்கம்’ படத்தின் சொந்தக்காரர் கருணாநிதி. அந்தளவுக்கு எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மையை அன்று கருணாநிதி புகழ்ந்தார். அந்த கருணாநிதியைத் தான் முதல்-அமைச்சராக்கினார். தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆசைப்படவில்லை. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்காக கருணாநிதி பல தொல்லைகளை கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்