கண்டன பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு தி.மு.க. வழக்கு போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
சென்னை,
தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழக அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் 3 மற்றும் 4-ந் தேதிகளில் (நாளையும், நாளை மறுநாளும்) கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த கூட்டத்துக்கு அனுமதி கேட்டு அந்தந்த போலீஸ் நிலையங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடந்த சனிக்கிழமை வரை தி.மு.க. சார்பில் மனு கொடுத்துள்ளனர். கரூரில் மட்டும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்துள்ளனர். மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதை பரிசீலிக்க போலீசாருக்கு கால அவகாசம் வேண்டும்’ என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிப்பு வெளியிட்டு, பெரும் தொகை செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கிற்காக தமிழக டி.ஜி.பி.யின் கருத்தை கேட்டு உடனே தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இந்த கோரிக்கையை ஏற்காத நீதிபதி, ‘தி.மு.க. வேண்டுமென்றால் பொதுக்கூட்ட தேதியை தள்ளிவைக்கட்டும். போலீசாரின் கருத்தை கேட்காமல் வெற்று உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது’ என்றார்.
பின்னர், ‘இந்த வழக்கை 3-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். அப்போது போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசீலிக்க டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.