தமிழகத்துக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை முழுமையாக எதிர்ப்போம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகளுக்கு அனுமதி: தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திட்டங்களை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.;

Update:2018-10-03 04:30 IST
சென்னை,

சென்னை தியாகராயநகரில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதே?...

பதில்:- தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய திட்டங்களை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கும்.

கேள்வி:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அந்த நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறதே?

பதில்:- நீதிமன்றத்தின் மூலம் ஆளுமை செலுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தக்கூடிய செயலில் தமிழக அரசு தனது கடமையை செய்து கொண்டிருக்கிறது.

கேள்வி:- கருணாசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- உறுதியாக, கருணாஸ் கொண்டிருக்கிற கொள்கைக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறீர்களா?

பதில்:- நீங்கள் சொல்லித்தான் இந்த தகவல் எனக்கு தெரிகிறது.

கேள்வி:- மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- கொள்கை ரீதியாக, மத்திய அரசு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை அறிவித்திருக்கிறது. அது முறைப்படி மத்திய அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவேண்டும் என்பது தான் நடைமுறை. அது கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- தமிழக உள்ளாட்சி துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதி வந்து விட்டதா?

பதில்:- மத்திய நிதி பகிர்வில் இருந்து தமிழகத்தின் உள்ளாட்சி பணிகளுக்கு ரூ.1,350 கோடி வந்து சேர்ந்து விட்டது. அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகிறது.

கேள்வி:- தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் இருக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறாரே?

பதில்:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியிலும் பயங்கரவாதமோ, நக்சலைட்டுகள் நடமாட்டமோ இல்லை. முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன் அறிந்து, புரிந்திருந்தால் அவர் எங்களிடம் தெரிவித்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்