சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2018-12-13 06:54 GMT
புதுடெல்லி

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்  தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலை கடத்தல்  வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனையடுத்து தமிழக அரசின் பதிலும் தாக்கல் செய்யப்பட்டு ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.  இந்த நிலையில், கடந்த நவம்பர் 30-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது.

சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்ததற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். ஓய்வு பெற்ற அதிகாரியை, பதவியில் தொடருமாறு  உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

தமிழக அரசின் மேல்முறையீடை விசாரித்த  சுப்ரீம் கோர்ட் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்