‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு;

Update:2019-02-01 03:00 IST
சென்னை, 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், ‘இளையராஜா 75‘ என்ற நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுகுழுவை கூட்டாமல், சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதற்காக பெரும் தொகையை செலவு செய்துள்ளனர். இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய போவதால், அவர்களை ரூ.7 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். பணத்தை டெபாசிட் செய்யாமல், நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி கே.கல்யாண சுந்தரம் விசாரித்தார். அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்ட இந்த நிகழ்ச்சியை நடத்துவதாகவும், இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் கடந்த 2016-ம் ஆண்டே கலந்து ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘இந்த வழக்கு கடைசி நேரத்தில் தொடரப்பட்டுள்ளது. வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே, ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி நடத்த தடை இல்லை. இதற்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்