23-ந் தேதிக்கு பிறகு நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் : மு.க.ஸ்டாலின் பேச்சு

23-ந் தேதிக்கு பிறகு நாட்டுக்கும், தொழிலாளர்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று மே தின கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update:2019-05-02 05:28 IST
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்து மே தின பேரணியில் கலந்துகொண்டார். அவருடன் மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொ.மு.ச. தலைவர் சண்முகம் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.

சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே பேரணி நிறைவடைந்து, அங்கு மே தின கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மே 1-ம் நாளை தொழிலாளர் தினமாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்தால் தான் அவர்களின் உரிமைகள், உரிமையோடு நம்மிடத்தில் வந்துசேர முடியும். உரிமைகளை ஜனநாயக தன்மையோடு பெற்றிட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மே 1-ந் தேதியை கொண்டாடி வருகிறோம். இதனை கொண்டாடுவதற்கு எல்லாவிதத்திலும் உரிமை உள்ள ஒரு இயக்கம் தி.மு.க. தான்.

பிரதமர் மோடி, நான் தான் நாட்டின் காவலாளி என்று சொல்லலாம். ஆனால் மோடியை பொறுத்தவரை நாட்டின் காவலாளி அல்ல, நாட்டின் களவாணியாக விளங்கிக்கொண்டு இருக்கிறார். தி.மு.க. தான் இந்த நாட்டின் காவலாளியாக, ஒட்டுமொத்த தொழிலாளிகளின் காவலாளியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் எந்த அளவுக்கு நசுக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் எந்த அளவுக்கு நிராகரிக்கப்பட்டு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. உரிமைக்காக, கோரிக்கைக்காக போராடக்கூடிய தொழிலாளர்கள், விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். உரிமைக்கு போராடும்போது தடியடி நடத்தப்படுகிறது. சிறையில் அடைக்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு உள்ள விவசாயிகள் உரிமைக்காக போராடி பார்த்து வழியில்லாமல் நாட்டின் தலைநகரமான டெல்லிக்கு சென்று போராடினர். அப்போது நாட்டின் பிரதமர் ஒரு ஆறுதலுக்கு கூட அவர்களை அழைத்து பேசவில்லை. மின்ஊழியர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கூட வழங்க முடியாத நிலையில் தற்போதைய அரசு உள்ளது. நாட்டில் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள், மோடியின் ஆட்சியில் கார்பரேட் கம்பெனிகளுக்கு அடகுவைக்கும் நிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறது.

அதற்கு எல்லாம் மாற்றாக ஒரு வழிகாணும் வகையில், வருகிற 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அப்போது, நிச்சயமாக உறுதியாக இதற்கு எல்லாம் ஒரு விடிவுகாலம் கிடைக்கத்தான் போகிறது. அந்த நாளை எதிர்நோக்கி காத்திருப்போம். நாட்டுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விடிவுகாலம் 23-ந் தேதிக்கு பிறகு பிறக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தாளமுத்து நகர் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் சென்றபடி பிரசாரம் செய்தார்.

அப்போது தாளமுத்து நகர் பகுதியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘22 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கு தான் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்