கோமதிக்கு ரூ.10 லட்சம், ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஆசிய தடகள போட்டியில் சாதித்த தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.10 லட்சமும், வீரர் ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;
சென்னை,
ஆசிய தடகள போட்டியில் சாதித்த தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.10 லட்சமும், வீரர் ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோமதிக்கு குவியும் பரிசு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த திருச்சி முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் ரூ.15 லட்சம், தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம், காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம், காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டன.
நடிகர் விஜய்சேதுபதி தனது ரசிகர் மன்றம் சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அவருக்கு அளித்தார். இந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து, கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததையொட்டி அவரை பாராட்டி, கடந்த ஏப்ரல் 23-ந்தேதியன்று வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தேன்.
இதே போட்டியில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவையும் பாராட்டி கடிதம் அனுப்பியிருந்தேன்.
ரூ.10 லட்சம் தொகை
விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பதக்கம் வெல்பவர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசால் உயரிய ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆசிய தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துக்கு உயரிய ஊக்கத் தொகையாக பத்து லட்சம் ரூபாயும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவுக்கு ஊக்கத்தொகையாக ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவர்கள் இருவரும் மென்மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் பல பெற அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டு எனது வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.