கோயம்பேடு பஸ் நிலையம் அருகே குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் தீ விபத்து 4 மணி நேரம் போராடி அணைத்தனர்
கோயம்பேடு பஸ் நிலையம் அருகே குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணை-த்தனர்.;
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் பின்புறம் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான 89 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் பெரிய மற்றும் சிறிய அளவிலான மரங்கள் வளர்ந்து உள்ளன. அத்துடன் புற்கள், செடிகளும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது.
இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து கழிவுநீரை சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒரு பகுதியில் பெரிய அளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
தீ விபத்து
இந்த காலி இடத்தின் ஒரு பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோடைவெயிலுக்கு புற்கள், செடிகள் அனைத்தும் நன்கு காய்ந்து இருந்ததால் காற்றின் வேகத்தில் தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது. காய்ந்த புற்களோடு பச்சை புற்களும், மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் எழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு, அசோக்நகர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் தீயின் வேகம் அதிகமானதால் வடபழனி, விருகம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மொத்தம் 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
4 மணிநேரம் போராட்டம்
தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானதால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தண்ணீர் லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தீயை அணைத்த பிறகும் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டதால் கோயம்பேடு பஸ் நிலையம், மார்க்கெட் பகுதியில் இருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் ஆங்காங்கே சில இடங்களில் சிறிய அளவில் காய்ந்த முட்செடிகளில் தொடர்ந்து தீப்பிடித்து எரிவததால் 2 தீயணைப்பு வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அங்கு பணிபுரிபவர்கள் யாரோ சிகரெட் பிடித்து விட்டு நெருப்பை அணைக்காமல் காய்ந்த புற்கள் மீது வீசியதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா? என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.