“மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமலஹாசன் பேசி இருக்கிறார். அவரது நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. பயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது.
இந்து மதம் புனிதமான மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி விட்டது. கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.
எச்சரிக்கை
ஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமலஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை. இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
நாங்கள் சாதனையை சொல்லித்தான் ஓட்டு கேட்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் இல்லை. அவர்கள் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஒரு சென்ட் இடம்கூட யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் தி.மு.க.வினர் இருக்கும் நிலத்தை வளைத்துக்கொண்டனர். தி.மு.க.வினர் தங்கள் இயலாமையை கூறி வருகின்றனர். தோல்விக்கு காரணம் கூறுவதற்காக, அ.தி.மு.க. கோடிகளை கொடுத்து ஜெயித்து விட்டதாக கூறு கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.