மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம்: நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வதை போலீசார் தடுக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கணேசன், ரகு உள்பட 4 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணேசன், ரகு ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, விபத்துக்குள்ளான கார் காப்பீடு செய்துள்ள காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு சத்தியமங்கலத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் கணேசன், ரகு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘கணேசன், ரகு ஆகியோருக்கு முறையே ரூ.1.17 லட்சமும், ரூ.87 ஆயிரமும் இழப்பீடாக நிர்ணயம் செய்தது. இந்த தொகையில் 50 சதவீதத்தை காப்பீட்டு நிறுவனமும், 50 சதவீதத்தை மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.
மேல்முறையீடு
இந்த இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில், கணேசனும், ரகுவும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றாலே, ஓட்டுபவரால் பிரேக் போடவும், வாகனத்தை சரியாக ஓட்டவும் முடியாது. ஆனால், இந்த வழக்கில், ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். கண்டிப்பாக வண்டியை ஓட்டிய நபரால் கேண்டில்பாரை சரியாக கையாள முடியாது. பிரேக்கையும் போட முடியாது. எனவே, விபத்துக்கு இவரும் காரணமாக உள்ளார்.
நடவடிக்கை இல்லை
அதனால், காயமடைந்தவர்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும், மீதமுள்ள 50 சதவீதத்தை கார் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமும் வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சரியானது தான். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறேன். அதேநேரம், மோட்டார் சைக்கிளில் 2 பேர் மட்டுமே சட்டப்படி பயணம் செய்ய வேண்டும். ஆனால், 3 பேர், 4 பேர் என்று சட்டத்தை மீறி பயணம் செய்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் அமைதியாக உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரின் செயல் கண்டனத்து உரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.