நில அளவையாளர் தேர்வை 4,300 பேர் எழுதினர்
மாவட்டத்தில் 23 மையங்களில் நடந்த நில அளவையர் தேர்வை 4 ஆயிரத்து 300 பேர் எழுதினர்.;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நில அளவையாளர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்காக சேலம் மாவட்டத்தில் 23 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்த மையங்களில் நேற்று நில அளவையர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 6 ஆயிரத்து 782 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். முதல் தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வை 4,300 பேர் கலந்து கொண்டு எழுதினர். 2,400 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதைத்தொடர்ந்து பிற்பகலில் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இந்த எழுத்து தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர்.