ஆவடி அருகே வீடு புகுந்து திருடிவிட்டு வீட்டு உரிமையாளரிடமே 'லிப்ட்' கேட்ட திருடன்

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடி விட்டு வீட்டின் உரிமையாளரிடமே ‘லிப்ட்’ கேட்ட திருடனை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-11-29 05:34 GMT

ஆவடி

அவடியை அடுத்த மோரை, வீராபுரம் பச்சையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ஜெனின் ராஜதாஸ் (வயது 34). இவர், ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவர், வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி வித்யாவுடன் மோட்டார் சைக்கிளில் இறைச்சி வாங்க கடைக்கு சென்றார்.

சுமார் அரை மணிநேரம் கழித்து இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் கொடுப்பதற்காக ஜெனின் ராஜதாஸ் தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் ஒருவர், ஜெனின் ராஜதாசிடம் மோட்டார் சைக்கிளில் 'லிப்ட்' கேட்டார்.

அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த அவர், மர்மநபரை பிடிக்க முயன்றார். உடனே அந்த நபர் தப்பி ஓடினார். பின்னர் ஜெனின் ராஜதாஸ், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் மர்மநபரை மடக்கி பிடித்தார். அவரது சட்டை பையில் சோதனை செய்த போது தனது வீட்டில் திருடிய நகை மற்றும் வெள்ளி கொலுசுடன், 100-க்கும் மேற்பட்ட திருட்டு சாவிகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர், பெரிய காஞ்சீபுரம் பெருமாள் நாயக்கன் தெருவை சேர்ந்த உமர் (44) என்பது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், உமரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்