மரத்தில் கட்டி வைத்து கார் டிரைவர் மீது தாக்குதல்
நத்தம் அருகே, கந்து வட்டி கேட்டு மரத்தில் கட்டி வைத்து கார் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ராமன். நெசவுத்தொழிலாளியான இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வருகிறார்.
இவர், சாத்தாம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். இதற்கு அவர், மாதந்தோறும் வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் போதிய வேலை இல்லாததால், ராமனால் வட்டி கொடுக்க முடியவில்லை.
இதனால் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம், ராஜேஷ் அடிக்கடி கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் ராமனால் வட்டி கொடுக்க முடியவில்லை.
மரத்தில் கட்டி வைத்து...
இந்தநிலையில் சாத்தாம்பாடியில் நடந்த காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் வந்தார். அவருடன் ராமனின் மனைவி சுமதி, மகனும், கார் டிரைவருமான ஜோதிமணி (32) ஆகியோர் நிகழ்ச்சி நடக்கும் வீடு நோக்கி சென்றனர்.
ஊர்மந்தை அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ், அவருடைய தந்தை அம்பலம், தாயார் சாந்தி ஆகியோர் ராமனிடம் வட்டி கேட்டு தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஜோதிமணியை பிடித்து மந்தையில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற ராமன், சுமதியும் தாக்கப்பட்டனர்.
கைது-வலைவீச்சு
ஜோதிமணி மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜோதிமணியை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜோதிமணி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அம்பலம், சாந்தி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.