சொக்கநாதபாளையம்- அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா;திரளான பக்தர்கள் பங்கேற்பு
சொக்கநாதபாளையம்- அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனா்.;
சென்னிமலை
சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 22-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இதேபோல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் சொக்கநாதபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்னி கும்பம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து காலை 7 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமலிங்கபுரம், எல்லை குமாரபாளையம், மேட்டூர், பாலக்காட்டுபுதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மாரியம்மன் அருள் பாலித்தார். இரவு கம்பம் பிடுங்கப்பட்டு நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.
இதேபோல் சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த வாரம் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.