பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

இடையக்கோட்டை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2023-02-20 00:30 IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலூகா இடையக்கோட்டை அருகே வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து முதலில் கோவில் பரம்பரையாளர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். அவர்கள் தலையில், பூசாரி பூச்சப்பன் தேங்காய் உடைத்தார்.

இதேபோல் பிற்பகல் கோவில் முன்பு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஈர உடையுடன் பயபக்தியோடு வரிசையில் அமர்ந்து இருந்தனர். அப்போது கோவில் பூசாரி, கட்டையால் ஆன ஆணி செருப்பை அணிந்துகொண்டு அருள் வந்து ஆடினார். பின்னர் அவர் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். இதனை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

இதையடுத்து பெண் பக்தர்கள் மீது பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கல்ய பூஜையும் நடந்தது. விழாவில் திண்டுக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, கரூர் ஆகிய மாவட்டஙகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்