வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து மனைவியிடம் நாட்டு மருந்து என்று கூறினார்
வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து மனைவியிடம் ஜமேஷா முபின் நாட்டு மருந்து என்று கூறியதாக அவரது மாமனார் அனிபா தெரிவித்து உள்ளார்.;
வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து மனைவியிடம் ஜமேஷா முபின் நாட்டு மருந்து என்று கூறியதாக அவரது மாமனார் அனிபா தெரிவித்து உள்ளார்.
என்.ஐ.ஏ. விசாரணை
கோவையில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் பலியானார். இவரது மாமனார் அனிபா நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஜமேஷா முபினிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஜமேஷா முபினின் குடும்பத்தினர் அவரிடம் இருந்து ஒதுங்கி கொண்டனர். இதையடுத்து அவர் எங்களது வீட்டின் அருகே வசித்து வந்தார். தற்போது உள்ள வீட்டிற்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்புதான் சென்றனர்.
ஜமேஷா முபினுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் தனது குழந்தைகளிடம் மிகவும் பாசமாக இருப்பார். அவர்களை அடித்தது இல்லை. அப்படிப்பட்ட நபர் இது போன்று செய்தாரா? என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை கேள்வி பட்டதும் எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் கடந்த 1½ மாதங்களுக்கு முன்தான் கார் ஓட்டி பழக தொடங்கினார். இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, சரியாக வேலையில்லை, அதனால் டிரைவர் வேலைக்காக கார் ஓட்டி பழகுவதாக தெரிவித்தார்.
நாட்டு மருந்து
கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற 2 நாட்களுக்கு முன் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு சென்றார். நண்பர்கள் யாரும் அவரை தேடி வரமாட்டார்கள். அவரது உறவினர் அசாருதீன் மட்டுமே அவருடன் இருப்பார். முபின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை.வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் குறித்து எனது மகள் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அதற்கு அவர் நாட்டு மருந்து, தேன் விற்பனை செய்யப்போகிறேன் என்றும், அந்த பெட்டிகளில் இருப்பது நாட்டு மருந்து தான் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.