மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருவெறும்பூர் அருகே மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.;
திருவெறும்பூர் அருகே மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மிதமான மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மிதமான மழை பெய்தது.
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் பத்தாளப்பேட்டை, சூரியூர், காந்தளூர், பலங்கனாங்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளன.
வயல்களில் மழைநீர்
கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நடவு செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உரம், நடவு கூலி என பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். தற்போது, பெய்து வரும் தொடர் மழையால் அவைகள் தண்ணீரில் மூழ்கி நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே நஷ்ட ஈடுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தா.பேட்டை
தா.பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கடைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது, சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையினால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போதிய பயணிகள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த மழையால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.
துறையூர்
துறையூரில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. துறையூரில் உள்ள பள்ளிகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டதால் வெளியூர் மாணவர்கள் பள்ளிக்கு வந்தபின்னர்தான் அவர்களுக்கு தகவல் தெரிந்தது. இதனால் அவர்கள் பள்ளி வந்து திரும்பி சென்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.