பொதுமக்கள், மாணவர்கள் யாரும் நீர்நிலை அருகில் செல்ல வேண்டாம்
கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் யாரும் நீர்நிலை அருகில் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்;
விழுப்புரம்
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையொட்டி கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மழைக்கால சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆனாங்கூர் பகுதியில் குழாய் மூலம் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்புகளை பொக்கலைன் எந்திரம் மூலம் அகற்றி மழைநீர் தடையின்றி செல்லும் வகையிலும், பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறும், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தொடர்ந்து பில்லூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததை தொடர்ந்து அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிளை பார்வையிட்ட கலெக்டர் இதுபோன்று பழமை வாய்ந்த மரங்களுக்கு அருகில் வசிப்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
மேலும் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தரைப்பாலத்தில் அதிகளவில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட கலெக்டர், பாலத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கலெக்டர் மோகன், நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு அறிவுரை
மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் யாரும் அருகில் உள்ள நீர்நிலை, குளம், குட்டை, ஏரி, மதகுகள், அணைக்கட்டுகள் போன்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவது, குளிப்பது, துணி துவைப்பது, செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாதவாறு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பருவமழையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மழை காலத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் அனைவரும் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். கனமழை காலங்களில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.