கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-பள்ளிகளுக்கு விடுமுறை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைவிடாமல் நேற்று பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பள்ளிக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நாள் முழுவதும் இடைவிடாமல் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்றனர். அந்த நேரம் மழை கொட்டியதால் பலரும் நனைந்தபடி சென்றனர். இந்தநிலையில் காலை 7.45 மணி அளவில் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவித்தார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதனால் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு மழையில் நனைந்தபடி சென்றனர். அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மிதமான மழை பொழிவால் நனைந்தபடியும், குடைகளை பிடித்தும் சென்றனர்.
காலை முதல் மழை பெய்ததால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளும், வியாபாரத்தை தொடர முடியாமல் வீட்டிற்கு சென்றார்கள்.
இதேபோல் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, சூளகிரி உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிகாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை அளவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில்வருமாறு:-
நெடுங்கல் 12.6, பெனுகொண்டாபுரம் 4.2, கிருஷ்ணகிரி, பாரூர் தலா 2.5, ஊத்தங்கரை 3, பாம்பாறு அணை 5, கிருஷ்ணகிரி அணை 1.2.