வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம்

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.;

Update:2022-11-09 00:25 IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம்‌ வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது :-

இந்திய பாராளுமன்றம், நாடாளுமன்றம் சமீபத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச்‌ சட்டம் 1951 ஆகியவற்றில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்களில் ஒன்றான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 14 (பி) -ல் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி முதலாம் நாள், ஏப்ரல் முதலாம் நாள், ஜூலை முதலாம் நாள் மற்றும் அக்டோபர் முதலாம் நாள் என 4 தகுதியேற்படுத்தும் நாட்களாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2023 தொடர்பான பணிகள் 1.1.2023-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தொடங்கப்பட உள்ளது. அதற்கு ஏதுவாக இன்று (புதன்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் 8.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்படும்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 12, 13, 26, 27 -ந் தேதிகளில் (4 நாட்கள்) படிவங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும். வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஜனவரி 1-ம் (2023) நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த 31.12.2004 அன்றோ (அ) அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள நபர்களின் விண்ணப்பங்களை மட்டும் கண்டிப்பாக இந்த சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் 1.4.23, 1.7.23, 1.10.23 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியடையும் தகுதியான வாக்காளர்களிடமிருந்து இந்த சிறப்பு சுருக்கத் திருத்த காலத்திலேயே முன்னதாக படிவங்களைப் பெறலாம்.

பரிசீலனைக்கு...

இந்த விண்ணப்பங்களை அந்தந்த காலாண்டுகளின் முதல் மாதம், முதலாம் நாள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் வினோத்குமார், அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், அனைத்து தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் (தேர்தல் பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்