சீர்காழி பகுதியில் பரவலாக மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
சீர்காழி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.;
சீர்காழி:
சீர்காழி பகுதியில் பரவலாக மழை பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
பரவலாக மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில வாரங்களாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மூழ்கின.வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கிய நிலையில் மீண்டும் நேற்று காலை முதல் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மழை நீரை வடிகட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீட்டின்சுவர் இடிந்து விழுந்தது
புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை சீர்காழி நகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழையால் சீர்காழி பனங்காட்டு தெருவை சேர்ந்த சேகர் (வயது 50) என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து கீழே விழுந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
மழை அளவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:- கொள்ளிடம்-27, செம்பனார்கோவில்-8, மணல்மேடு -4,சீர்காழி-2.