இணையதள செயலி அடிக்கடி முடக்கம்
கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் இணையதள செயலி அடிக்கடி முடங்கி விடுகிறது. இதனால் வாகன பதிவு பணிகள் பாதிக்கப்படுகிறது.;
கூடலூர்
கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் இணையதள செயலி அடிக்கடி முடங்கி விடுகிறது. இதனால் வாகன பதிவு பணிகள் பாதிக்கப்படுகிறது.
போக்குவரத்து அலுவலகம்
கூடலூர் மாக்கமூலாவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வாகனங்களை பதிவு செய்யக்கூடிய இணையதள செயலி அடிக்கடி முடங்கி விடுகிறது. இதனால் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள் கால விரயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
செயலி முடக்கம்
குறிப்பாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகன தகுதி சான்றிதழ் பெறுதல், புதிய வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இணையதள செயலி மூலமே நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆய்வாளர் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் நிலை காணப்படுகிறது. இந்த சமயத்தில் இணையதள முடக்கம் காரணமாக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து பணிகளும் நிலுவையில் வைக்கப்படுகிறது.
தடையின்றி சேவை
இதுகுறித்து கேட்டால், வாகன இணையதள செயலி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்காக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்சனை மாவட்டம் முழுவதும் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இணையதள வாகன செயலி முடக்கத்தை விரைவாக சீரமைத்து தடையின்றி சேவைகள் வழங்கவும், அனைத்து வேலை நாட்களிலும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நிரந்தரமாக மோட்டார் வாகன ஆய்வாளரை நியமிக்கவும் வேண்டும் என்றனர்.