தேசிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில் தொடரும் கன மழை: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 18 பேர் பலியாகினர். 

இந்நிலையில் கனமழையால் பலி எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கான்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கன மழையால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதால் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உஷால் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.