தேசிய செய்திகள்
பசு பாதுகாவலர்கள் வன்முறை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் வன்முறையில் ஈடுபடுவது மற்றும் கும்பலாக சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொல்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுபோன்ற கொடூரமான செயல்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே இதை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஜூலை 20–ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற வன்முறைகளை தடுத்து நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் மத்திய, மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக பரிசீலிக்க மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தாங்கள் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக இதுவரை 11 மாநில அரசுகள்தான் அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாக கூறினார்கள். அத்துடன், மற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அவற்றின் உள்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.