டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வரலாற்று வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.இந்த போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விளையாடினர்.இதில் தொடக்கத்தில் இருந்தே போட்டியை தன்வசப்படுத்தினார் 20 வயது நிறைந்த ஒசாகா.  முதல் செட்டை 6-2 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.செரீனா வில்லியம்ஸ் போட்டியின்பொழுது பயிற்சி பெறுகிறார் என கூறி அவரை நடுவர் கார்லோஸ் ரமோஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.  இதனால் ஆவேசமடைந்த செரீனா, நீங்கள் ஒரு பொய்யர், ஒரு திருடர் என கூறினார்.  செரீனாவிற்கு எச்சரிக்கை செய்த ரமோஸ் அதற்கு தண்டனையாக ஒசாகாவுக்கு வெற்றிக்கான ஒரு புள்ளியை வழங்கினார்.இதனால் 2வது செட்டில் போட்டி 5-3 என்ற நிலையில் இருந்தது.  எனினும் அடுத்த புள்ளியை செரீனா கைப்பற்றினார்.  ஆனால் தொடர்ந்து உற்சாகமுடன் விளையாடி தனது நாட்டிற்கான வரலாற்று வெற்றியை ஒசாகா பதிவு செய்துள்ளார்.  இந்த போட்டியில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று பட்டத்தினை வென்றார்.கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.