மாநில செய்திகள்
டீசல் விலை உயர்வு; பாம்பன் விசை படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

ராமநாதபுரத்தில் பாம்பன் விசை படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வுக்கு எதிராக இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்,

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கலால் வரி உயர்வு ஆகியவற்றால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது.  இந்த நிலையில் சமீப காலங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரட்டை இலக்க பைசாக்களில் உயர தொடங்கியது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்நிலையில், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கவும் கோரி பாம்பன் விசை படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினை அடுத்து விசை படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.